Wednesday, March 19, 2014

வாழ்க்கைக்கு ஏற்ற தமிழ் பொன்மொழிகள்...

ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்
பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்.

மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் 
அந்த விலையைப் பற்றியும்
நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்.

அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் 
மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழ வேண்டும்.

உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் 
உன் தொப்பியிடமும் யோசனை கேள்.

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது 
மிகவும் அபாயகரமானது.

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு 
நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.

அவசரமாகத் தவறு செய்வதை விட 
தாமதமாகச் சரிவர செய்வது மேல்.

மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும்
நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் 
துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி 
மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. 
மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் 
பணத்தால் வருபவை அல்ல...

வாழ்க்கைசிக்கலான சிந்தனை...

பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை
பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது

கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம்
அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை

ஊருக்கு வெளியில் பெரிய பங்களா
வீட்டில் இருப்பது 2 பேர்

மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி
நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்

பட்டப் படிப்புகள் நிறைய
பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு

கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை
மனசு நிறைய நிம்மதி இல்லை

புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம்
உணர்வுப் பூர்வமான உரையாடல்களும்
சின்ன சின்ன பாராட்டுகளும் குறைவு

சாராயம் நிறைந்து கிடக்கு
குடிதண்ணீர் குறைவாய் தான் இருக்கு

முகம் தெரிந்த நண்பர்களை விட 
முகநூல் நண்பர்களே அதிகம்

மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர்
மனிதம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும்...

விந்தையான சிந்தனை...

நீர் அமைதியாக இருப்பதால் 
முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே

ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.
இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.

எங்கே விழுந்தாயென பார்க்காதே
எங்கே வழுக்கினாயென பார்.

பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட
முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.

நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். 
ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு
ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்

யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா?
இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.

ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!

வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்

கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு கற்றுக்கொள்வாய்
பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு
பெற்றுக்கொள்வாய்

நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்
நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,
நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் 
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.

நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது 
உங்களுக்கு கண்டிப்பாககிடைத்தே தீரும்...

மனித அவதாரங்கள்...

புல்லாங்குழலை
விரல்கள்
இசைக்கும்போது
கண்ணபிரான்

உழும் ஏரைத்
தோள்கள் சுமக்கும்போது
பலராமன்

கூர்கோடரியைக்
கைகள் உயர்த்தும்போது
பரசுராமன்

என்று ஏக காலத்தில்
அவதாரங்கள் கொண்டதாம்
ஒரே பூரணத்துவம்

இன்று மண்டியிடும்போது
கிருத்துவன்

தொழும்போது
இஸ்லாமியன்

சாஸ்டாங்கமாய் விழும்போது
இந்து

என
ஏக காலத்தில்
அவதாரங்கள் கொள்கின்றது
ஒரே மானுடம்...

மனிதன்...

குலம் வேறு
குணம் வேறு
குருதி ஒன்றுதான்…

நிறம் வேறு
மொழி வேறு
வாழ்க்கை ஒன்றுதான்…

கண் வேறு
கனவுகள் வேறு
கண்ணீர் ஒன்றுதான்…

இனம் வேறு
மனம் வேறு
பெயர் மட்டும் மனிதன்...

வெளிச்சம்...

நட
நடந்து கொண்டே இரு
இலக்கு நெருங்கும்

தயக்கமும் சோர்வும்
தூரத்தைத் தூரமாக்கும்

தடைகள்
ஊக்க மாத்திரைகள்

நிதானம்
வெற்றிப் பாதையின்
வெளிச்சம்...

மூலதனம்...

முடியுமா என்பது முட்டாள்தனம்:
முடியாது என்பது மூடத்தனம்.
முடியும் என்பதே மூலதனம்...